நவக்கிரக

கோவில்கள்

அறுபடை

கோவில்கள்

108 திவ்யதேசம

 

கோவில்கள்

இந்துமத

 

பெருமைகள்

 
Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam

ஆழ்வார்கள்

பாற்கடல் பரந்தாமன் மீது பேரன்பு கொண்டு அவன் மீது பாசுரங்கள் பல பாடிய பன்னிரு ஆழ்வார்கள்
அரங்கனது ஐம்படைகளில் ஒன்றான பாஞ்சஜன்யம் எனும் திருச்சங்கின் அம்சமாக அவதரித்த பொய்கையாழ்வார்
ஐப்பசி மாதம் பெருமாளின் நட்சத்திரமான திருவோணத்தன்று செவ்வாய்க்கிழமை அவதரித்தவர் இவர். பொய்கயில் அவதரித்த கரணத்தால் இப் பெயர் பெற்றார். அரங்கனின் கருணையால் இம்மை மறுமைகளின் பயன்களை உணர்ந்து, ஏழேழு பிறவிகளும் பயன் தருவது அரங்கன் சேவை ஒன்றே என்றுணர்ந்து, திருமாலிடம் பேரன்பு கொண்டு சேவை சார்த்தினார். ஹரியும், சிவனும் ஒன்றே என்று என உரைத்திட்ட மகான். " நயவேன் பிறர் பொருளை நள்ளேன்" என பரந்தாமனை பாடிப் பரவியவர். "என் நெஞ்சம் அவனையே நினைத்திருக்கின்றது. என் நா அவனது திருமேனியை பாடிக் கொண்டேயிருக்க விழைகின்றது. என் கண்கள் திருமகள் நாதனை காணவே ஆவலாயுள்ளன. என் செவிகளோ அவனது புகழையே கேட்க ஏங்குகின்றன" என்று எந்நேரமும் திருமாலை தொழுதவாரே வாழ்ந்தவர். பரஞான தத்துவம் கண்டவர். இறைவனின் புகழையும், ஆத்மாவின் தன்மையையும் பாடி சமயத்தை வளர்த்திட்டவர்.
திருமாலின் ஐம்படைகளில் ஒன்றான கௌமோதகி எனும் கதையின் அம்சமாய் அவதரித்த பூதத்தாழ்வார
பரஞான ததுவத்தை கண்ட பூதத்தாழ்வார் அருந்தமிழ் பாமாலைகளால் பரந்தாமனை சேவித்தவர். " அன்பே தகழியாக, ஆர்வமே நெய்யாக, இன்பு உருகு சிந்தை இடு திரியாக, நன்பு உருகி ஞானச் சுடர் ஏற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான் " என்று பைந்தமிழ் கொண்டு அரங்கனை போற்றியவர். " என் அனபை அகலாகவும், அன்பின் முதிர்ச்சியான ஆசையை நெய்யாகவும், உனை எண்ணி பொங்கும் இன்பத்தை திரியாகவும் கொண்டு ஞான விளக்கை திருமாலே உனக்கு ஏற்றினேன்" என்று தன் திருவந்தாதி பாடலில் கூறுகின்றார். தனது முழு முதற் கடவுளான பரந்தாமனிடம் மிகுந்த பற்று கொண்டு எந்நேரமும் அவன் புகழ் பாடி வாழ்ந்து வந்த பூதத்தாழ்வார் பரமனின் பூரண அருள் பெற்ற தெய்வப் பிறவியாவார். " யானே தவம் செய்தேன். ஏழ் பிறப்பும் எப்பொழுதும் யானே தவம் உடையேன் யானே இரும் தமிழ் நன் மாலை இணையடிக்கே சொன்னேன். பெருந்தமிழன் நல்லேன் பெரிது " என அருந்தமிழ் பாமாலை பாடியவர்.
அரங்கனின் ஐம்படைகளில் ஒன்றான நாந்தகம் எனும் வாளின் அம்சமாக அவதரித்த பேயாழ்வார்
ஐப்பசி மாதத்தில் தசமி திதியன்று சதய நட்சத்திரத்தில் வியாழக்கிழமையன்று அவதரித்தவர் இந்த வைணவப் பெரியார். " அது நன்று, இது தீது, என்று ஐயப்படாதே, மது அன்று தண் துழாய் மார்வன் பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின், முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து " எனப் பாடியவர். " இது நல்லது. அது கெட்டது என எண்ணி இதை பற்றுவோம், அதனை விடுவோம் என்றிருக்க வேண்டாம். துளசி மாலை அணிந்த பரந்தாமன் அனைவர்க்கும் பொதுவாக நிற்பவன். அவன் பாதம் தொழ தீரா வினைகள் யாவும் நொடியில் தீர்ந்தோடிடும்" என்பதே இதன் பொருள். அரங்கனின் அருளால் முதலாழ்வார்களான மூவரும் இணைந்து திருமாலின் மீது தலா 100 பாக்கள் பாடி மூன்று அந்தாதிகளை நமக்கு அருளினர்.
சிவநேசச் செல்வராய் வளர்ந்து பின்னர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வார
திருமழிசை என்ற ஊரில், பார்கவர் என்ற முனிவருக்கு பிறந்த குழந்தை கை கால்கள் இல்லாது பிறக்க, அதனை முனி தம்பதியர் ஒரு முற் புதரில் விட்டு சென்றனர். புதரில் கிடந்த குழந்தை அரங்கனின் திருவருளால் முழு உருவம் பெற்றது. அச் சமயம் அங்கு வந்த திருவாளன் எனும் பிரம்பு தொழில் செய்பவன், குழந்தையை கண்டு எடுத்து வளர்க்கலானான். திருமழிசை இறைவன் தந்ததாய் எண்ணி குழந்தைக்கு திருமழிசைபிரான் எனப் பெயரிட்டான். சிவநெறிச் செல்வராய் வளர்ந்த திருமழிசையார் பின்னர் பேயாழ்வார் அருளுடன் வைணவப் பெருமானானார். தன்னுடன் அரங்கனை எங்கும் அழைத்து செல்லும் வண்னம் அவனது பரிபூரண அருளை பெற்றிருந்தார். " படுத்துறங்கும் பெருமானே நீ என்னோடு வந்து பேசு " எனக் கூறி, பரந்தாமனையே தன் அருகில் வர வைத்த " பரப்பிரும்ம நிலை கண்டார் " என போற்றப்படுபவர்.
பரந்தாமனின் சேனைகள் அம்சமாய் அவதரித்த நம்மாழ்வார்
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் கடக லக்கினத்தில் தோன்றியவர் நம்மாழ்வார். காரியின் மகனாகப் பிறந்து, மாறன் என்ற பெயர் கொண்டிருந்தாலும், திருமகள் நாதன் இவரை " நம்மாழ்வார் " என்றழைக்க அப் பெயரே நிலைத்துவிட்டது. ஒரு சமயம் நம்மாழ்வார் புளிய மரத்தடியில் வீற்றிருந்த பொழுது 108 திவ்ய தேச பெருமாள்களும் வந்து இவர் திருமுகம் கண்டு சென்றனர். வைணவர் போர்ரும் ஆச்சார்யர்களில் முதல் மூவரும் பரமபதத்தை சேர்ந்தவர்கள். நான்காவதாக குறிப்பிடும் நம்மாழ்வாரே பூவுலக்த்தை சேர்ந்தவர். சைவர்கள், விநாயகர் வாழ்த்து கூறுவது போல், சடகோபர் என்றும் அழைக்கபடும் இவரை துதித்த பிறகே வைணவர்கள் நூல் இயற்றுகின்றனர். இவரைப் பாடினால் தான் யாம் ராமாயணத்தை ஏற்போம் என மேட்டு அழகிய சிங்கரே தன் திருவாய் மொழிந்திட்ட பெருமை கொண்டவர்.
மற்றோரைப் போலன்றி, நம்மாழ்வாரை மட்டுமே பாடிய மதுரகவியாழ்வார
ஆழ்வார் திருநகரி எனப்படும் ஒன்பது திருத்தலங்களுல் ஒன்றான திருக்கோளூரில் முன்குடுமிச் சோழிய மரபு அந்தணர் வம்சத்தில் வந்த, குமுதரென்னும் கணநாதருக்கு, மகனாய் ஒன்பதாம் நூற்றாண்டில், ஈஸ்வர ஆண்டு, சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று, வெள்ளிகிழமையில் பிறந்தவர் மதுரகவியாழ்வார். இவர் நம்மாழ்வாருக்கு முன்பு தோன்றியவர். தேன் மதுரச் சுவை கொண்ட கவி புனையும் திறமையினை அரங்கனின் அருளாய் பெற்றவர். பரந்தாமனைக் காண வேண்டி பல வட தேசங்கள் சுற்றித் திரிந்தார். பின்னர் மாயவன் கருணையால், அவனது அருளுடன் சடகோபர் என்ற நம்மாழ்வார் இருந்த திருக்குருகூர் வந்தடைந்தார். நம்மாழ்வாரின் பெருமை உணர்ந்து, அவரை தனது குருவாகக் கொண்டார். நம்மாழ்வர் புகழ் பரப்பினார். மற்ற ஆழ்வார்களை போல ஸ்ரீமந்நாராயணனை பாடாது, எந்தவொரு திருத்தலத்தையும் மங்களாசாசனமும் செய்யாது, குரு தொண்டே தெய்வத் தொண்டு என எண்ணி நம்மாழ்வாரை மட்டுமே பாடியுள்ளார் மதுரகவியாழ்வார்..
"பெருமாள் திருமொழி" தந்த குலசேகராழ்வார் எனும் " குலசேகரப் பெருமாள் "
சேர மன்னன் திடவிரதனுக்கு, அரங்கனின் அருங்கருணையே திரண்டு வந்து, எட்டாம் நூற்றாண்டில் மாசி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில், வெள்ளிக்கிழமையன்று மகனாய் பிறந்தவர் குலசேகரர். வைணவர்கள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டு ஒவ்வொரு நாளும் ராமாயணக் கதைகளை கேட்டு மகிழ்ந்தார். அரசவை காவலர் செய்த சூழ்ச்சியால் வைணவர்கள் மீது பழி வர, குடம் ஒன்றில் பாம்பை இட்டு, வைணவர் ஒன்றும் அறிந்திலர் என்றால் பாம்பு தீண்டாது எனக் கூறி, குடத்தினுள் தனது கைகளை விட்டார். பாம்பு தீண்டவில்லை. காவலர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். பின், தனது மகனிடம் அரச பொறுப்பை விட்டுவிட்டு, அடியாருடன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். திருப்பணிகள் பல செய்தார். பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்ததால் " குலசேகரப் பெருமாள் " என்று அழைக்கப்பட்டார். இவரது பாசுரங்கள் " பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படுகின்றது.
வேதவேதாந்த ஞானங்களை விஷ்ணுவின் மூலம் அறிந்திட்ட " பட்டர்பிரான்" எனும் பெரியாழ்வார

அரங்கனின் ஆணைப்படி வல்லி என்ற பெண்ணொருத்தி மூலம் தோன்றிய வல்லிப்புத்தூரில் குடியேறிய வேயர்கள் எனும் முன்குடுமிச் சோழிய மரபில் வந்த முகுந்தபட்டர் எனும் அந்தணருக்கு, அவர்தம் பெருந்தவத்தின் பயனாய், குரோதன ஆண்டு, ஆனி மாதம், சுவாதி நட்சத்திரத்தில், எட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர் விஷ்ணுசித்தர் எனும் பெரியாழ்வார். நந்தவனம் ஒன்றை அமைத்து அதில் நில, நீர், கொடி மற்றும் கோட்டுப் பூக்கள் என்று நால்வகை பூக்களையும் வளர்த்து, பரந்தாமனுக்கு நித்தம் சமர்ப்பித்து வந்தார். அன்றைய அரசனின் " பரம்பொருள் எது? " என்ற கேள்விக்கு, பரந்தாமனின் ஆணைப்படி அரசவை சென்று, வேத விற்பன்னர்கள் முன்னிலையில் பரம்பொருளின் ததுவம் சொல்லி " பட்டர்பிரான் " என்ற பட்டம் பெற்றார். பெரியாழ்வார் பாடிய 469 பாசுரங்கள் " பெரியாழ்வார் திருமொழி " என்று அழைக்கப்படுகின்றது.

தான் சூட்டிய பிறகே மாலையை பரந்தாமனுக்கு தந்திட்ட "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்"
நள ஆண்டு, செவ்வாய்க்கிழமை, புனர்பூச நட்ச்சத்திரமான ஒரு தினம், பெரியழ்வார் தமது நந்தவனத்தில் பரந்தாமனுக்கென பூக்கள் பறித்துக் கொண்டிருந்த வேளை, துளசிச் செடியின் அருகில் தெய்வீக அழகுடைய குழந்தை ஒன்று இருப்பதை கண்டார். குழந்தைக்கு கோதை என்ற பெயர் சூட்டி வளர்க்கலானார். தந்தையை போன்றே பரந்தாமனின் மீது ஆழ்ந்த காதலும், கவி பாடும் திறமையும் கொண்டிருந்தாள். ஆழ்வார் தினம் பெருமாளுக்கு தொடுக்கும் மாலைகளை தனக்கு சூட்டி அழகு பார்த்தாள். மாலைகள் முன்னைவிட மிக அழகாய் இருப்பதின் காரணம் அறியாது வியந்தார் ஆழ்வார். ஒரு நாள் அதன் காரணத்தையும் அறிந்தார். அபச்சாரம் என்றெண்ணினார். ஆனால், பரந்தாமனோ, கோதை சூட்டிய மாலையே தன் விருப்பம் என ஆழ்வாரது கனவில் வந்து கூறினார். கோதையும் " சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளாய் ஆண்டாள் " என்ற திருநாமம் கொண்டாள்.
திருமாலின் வைஜயந்தி வன மாலையின் அம்சமாய் அவதரித்த " தொண்டரடிப்பொடியாழ்வார்"
சோழ வள நாட்டில், திருமண்டங்குடி என்ற சிற்றூரில், முன்குடுமி சோழிய மரபில் வந்த, விப்ர வகுப்பை சேர்ந்த, வேத விசாரதர் எனும் திருமால் தாசருக்கு மகனாய், பிரபவ ஆண்டு, மார்கழி மாதம், செவ்வாய் கிழமை, திருக்கேட்டை நட்சத்திரத்தில் திருமாலின் வனமாலை அம்சமாய் அவதரித்தவர் விப்பிரநாராயணர் எனும் தொண்டரடிப்பொடியாழ்வார். திருமாலின் சேனைத்தலைவரான "சேனை முதலியார்" மூலம் வேதாந்தங்களை கற்றவர். ஸ்ரீரங்கத்து அரங்கனை " பச்சை மாமலை போல் மேனி, பவள வாய் கமலச் செங்கண் " என நெஞ்சுருகிப் பாடியவர். தேவதேவி எனும் தாசியின் சூழ்ச்சியால் சிறிது காலம் அவளுடன் இல்லறம் வாழ்ந்து, பின்னர் பரந்தாமனின் பெருங்கருணையால் அவ்விருள் நீங்கப்பெற்றார்.
திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சமாய் அவதரித்த "திருப்பாணாழ்வார்"
அரங்கன் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில் பாணர் வகுப்பில் புர்துர்மதி ஆண்டு ரோஹிணி நட்சத்திரத்தில் கார்த்திகை மாதம் புதன் கிழமையன்று பிறந்தவர். அக்காலத்தில் பாணர்கள் தாழ்ந்த குலம் என அந்தணர்கள் எண்ணியதால் அரங்கனை ஆலயத்தினுள் சென்று தரிசிக்காது காவிரிக் கரையில் நின்று தரிசித்து வந்தார். அவ்வாறு தரிசிக்கும் வேளையில், ஒரு நாள் உலோக சாரங்கமுனி என்ற அந்தணர் அரங்கனுக்கு நீர் எடுத்து செல்ல வந்தார். வழியில் பாணர் இருப்பதை கண்டார். பூஜை வேளையில் பேசும் வழக்கம் இல்லாததால், சிறு கல் ஒன்றை எடுத்து பாணரின் மீது எறிந்தார். கல் பாணரின் நெற்றியில் பட்டு ரத்தம் வந்தது. பதறிய பாணர் சாரங்கருக்கு வழிவிட்டார். ஆலயத்தின் உள் சென்ற சாரங்கர் அதிர்ந்தார். பாணரைப் போலவே அரங்கனின் நெற்றியிலும் ரத்தம் வழிந்தது. சாரங்கரின் கனவில் தோன்றிய பெருமாள் பாணரும் என் பக்தனே எனக் கூற, மறுநாள் பாணரை தன் தோள்களில் ஏற்றி ஆலயத்திற்கு அழைத்து வந்தார் சாரங்கமுனி. அரங்கனை கண்ட பாணர் பாசுரங்கள் பத்தினைப் பாடி அக்கணமே அரங்கனடி சேர்ந்தார்.
திருமாலின் ஐம்படைகளில் ஒன்றான சார்ங்கத்தின் அம்சமாய் அவதரித்த " திருமங்கையாழ்வார்"
சோழ நாட்டில், எட்டாம் நூற்றாண்டில், ஆலிநாடர் எனும் சேனைத் தலைவருக்கு நள ஆண்டு, கார்த்திகை மாதம், வியாழக்கிழமை, கார்த்திகை நட்சத்திரத்தன்று மகனாய் பிறந்தவர் நீலன் என்ற திருமங்கையாழ்வார். வளர்ந்த நீலன் படைத் தலைவனாகி, பின்னர் பரகாலன் என்ற பட்டம் பெற்று, திருமங்கை என்ற ஊரின் சிற்றரசனானான். அரசனாய் உலகியல் இன்பங்களிலே பற்று கொண்டு வாழ்ந்த வந்தான். அரங்கனின் திருவிளையாடல்படி, சுமங்கலை எனும் பெண்ணை கைபிடித்தான். சுமங்கலையின் ஆசைப்படி தினந்தோறும் திருமால் அடியார்களுக்கு அறுசுவை படைத்திட்டார். தன் கைப்பொருளை சிறிது சிறிதாக இழந்தான். அடியவர் பணி செய்யவும், ஆலயப் பணி புரிவதற்காகவும் வழிப்பறி செய்யலானான். பகதனின் தவறான வழியை தடுக்க எண்ணிய பரந்தாமன், அஷ்டாட்சர மந்திரத்தை கூறி பரகாலரது அகக்கண் திறந்தார். பரகாலன் திருமங்கையாழ்வாரானார். பல ஷேத்திரங்களுக்கு சென்று பாசுரங்கள் பாடினார்.
 
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathuyellowpages.com
New Page 1